பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில், அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் அரிசிப் பைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு நபரும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச அளவில் அரிசியை வாங்கி வைத்துக் கொள்ள் முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உலகம் முழுவதும் பரவலாக அரிசி சார்ந்த உணவுகள் உண்ணப்படுகிறது. ஆனால், எல்லாப் பகுதிகளிலும் அரிசி விளைவதில்லை. பல நாடுகள் முற்றிலும் இறக்குமதி அரிசியை நம்பியே இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர், எல் நினோ காலநிலை தாக்கம் போன்றவற்றால் அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், பாஸ்மதி அல்லாத பிற அரிசி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் அறிவித்தது. இதன்மூலம் உள்நாட்டுச் சந்தையில் தேவைக்கு ஏற்ற இருப்பை உறுதி செய்ய முடியும் என்றும், உள்நாட்டில் அரிசி விலை ஏறாமல் தவிர்க்க முடியும் என்றும் அரசு தெரிவித்தது. உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் 40 சதவீதம் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் அறிவிப்பு உலகளவில் உணவு பாதுகாப்பின்மை ஆபத்தை அதிகரிக்கும் சூழல் உறுவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உத்தரவால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் வெகுவாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நாடுகளில் ஏற்கெனவே உணவுப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை உத்தரவு மிகப் பெரிய அளவில் தாக்கத்தை அதிகரிக்கும். கடந்த ஆண்டு இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசியை 10.3 மில்லியன் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்ததாக ஏற்றுமதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்திய அரிசி ஏற்றுமதி நிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாஸ்கோ கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதால் உலக நாடுகள் கோதுமை விலை ஏற்றத்தால் சிக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி தடையும் உணவுப் பாதுகாப்பின்மைக்கு வித்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு இந்தியா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.