கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம்தேதி முதல் வார விடுமுறை செவ்வாய்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வார இறுதி நாட்களில் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பெருமை பேசும் வகையில் பல்வேறு அம்சங்கள் பெற்றுள்ள கீழடி அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 9 கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 18 கோடியே 43 லட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கீழடி அருங்காட்சியகத்தில் ‘மதுரையும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர்மேலாண்மையும்’, ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல்வழி வணிகம்’, ‘வாழ்வியல்’ எனும் 6 பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி அருங்காட்சியகத்தில் பொருண்மை சார்ந்து அமைக்கப்பட்ட கட்டடங்களான, வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல், கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு உரிய விளக்கம் இரண்டு நிமிட உயிரூட்டுக்காட்சி (அனிமேஷன்) காட்சிப்படுத்தப்படவுள்ளது. கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை மெய்நிகர்காட்சி (விர்ச்சுவல் ரியாலிட்டி எக்சிபிசன்) வாயிலாக தத்ரூபமாக உணர்ந்து கொள்ளும் வகையில் மெய்நிகர் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக் கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்ககால மக்களின் கடல்சார் வணிகத்தினை பிரதிபலிக்கும் வகையில் சங்ககால கப்பலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக்குழிகள், செங்கற் கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த மார்ச் 5ஆம் தேதி திறக்கப்பட்டது. பண்டைய தமிழர்களின் புகழினை, பறை சாற்றுகின்ற வகையிலும், உலக நாடுகள் வியக்கின்ற வகையிலும் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை காண தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். கீழடி என்ற கிராமம் தற்போது மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கி வந்த கீழடி அருங்காட்சியகத்திற்கு, சுற்றுலா, பண்பாடு(ம) அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மற்ற அருங்காட்சியகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், கீழடி அருங்காட்சியகத்திலும் பின்பற்றப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெள்ளிக்கிழமைதோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களான ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ம் 15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை அளித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை தினம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வார விடுமுறை நாளை செவ்வாய்கிழமைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை நாட்களில் அருங்காட்சியகத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.