மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் நடந்துள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தக் குற்றங்கள் விஷயத்தில் அமைதி காக்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் 33 ஆயிரம் குற்றங்கள் பாலியல் வன்கொடுமைகள் சார்ந்த குற்றங்கள்.
ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் அதிகரித்திருப்பது குறித்து தனது கவலையைத் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர குதாவை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் அஷோக் கெலாட் பதவி நீக்கம் செய்துள்ளார். முதல்வர் அஷோக் கெலாட் தனது அதிகாரத்தை இழந்துவிட்டார் என்றும், அவரது சொந்த மாவட்டத்தில், ஒரு பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகவும், முதல்வரின் இல்லத்திலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் அவரது சொந்த அமைச்சரே கூறுகிறார். இதற்காக, முதல்வர் கெலாட் ராஜினாமா செய்வாரா?
ராஜஸ்தானைப் போலவே, மேற்கு வங்கத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜியிடம் இருந்து மம்தா (அன்பு) விடைபெற்றுச் சென்றுவிட்டதா என்று தெரியவில்லை. ஹவுராவின் பஞ்ச்லா பகுதியில் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்ற ஒரு பெண்ணை 40-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அடித்து நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் மால்டா பகுதியில் 2 பெண்கள் அரைநிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். மமதா பானர்ஜி எங்கே போனார்? மாநில அரசு எங்கே போனது?. இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார்.