திமுக சின்னத்தில் வென்ற பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு தாவல்!

ஐஜேகே கட்சியின் நிறுவனரும் திமுக எம்பியுமான பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது. இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தரும் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரி வேந்தருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாரிவேந்தரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்தான் இன்று அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில்தான் இருக்கிறோம், இருக்கப்போகிறோம். இது உறுதியாகிவிட்டது. இந்திய ஜனநாயக கட்சியின் பார்வை தேசிய பார்வை. அதனால் தேசிய அளவிலான கூட்டணியில் இணைந்து உள்ளது. எந்த தொகுதி கேட்பது, எத்தனை தொகுதி கேட்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரி வேந்தரின் ஐஜேகே இணைவது உறுதியாகி உள்ளது.