சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, தமிழக பாஜக சார்பில் மாநகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் திமுக அரசை கண்டித்து, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்து வருவதாகவும், கோவை மாநகர பகுதிகளில் 100 இடங்களில் ஆர்பாட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்து வருவதாகவும், இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் எல்லா துறைகளிலும் ஒரு ரேட் பேசப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
கோவை தெற்கு தொகுதியை குறி வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மக்கள் குறைகளை கேட்டு வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யார் வந்து மக்களுக்கான பணியை செய்தாலும் வரவேற்கிறோம். நாங்கள் மக்களுக்கான பணியை செய்து வருகிறோம் எனவும் கூறினார்.
கோவை குண்டு வெடிப்பு, இந்து இயக்க சகோதரர்கள் படுகொலை போன்ற சம்பவங்களில் ஒரு சமூகத்தில் உள்ளவர்கள் மட்டும் ஈடுபட்டுள்ளதை அனைவரும் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு அந்த சமூகத்தவர்கள் ஆதரவு தெரிவித்தால் மீண்டும் அந்த செயலை தடுக்க முடியாது என அறிவுறுத்தியதுடன், இதுபோன்ற சம்பவங்களுக்கு மத சாயம் கொடுத்து அமைதியை கெடுக்க வேண்டாம் எனவும் தீவிரவாதிகளை அந்த மாதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.