விளம்பரத்துக்கு ரூ.1100 கோடி செலவு செய்யும் டெல்லி அரசுக்கு உள்கட்டமைப்புக்கு நிதி இல்லையா?: உச்சநீதிமன்றம்

3 ஆண்டுகளில் ரூ.1,100 கோடியை விளம்பரத்துக்கு செலவு செய்யும் டெல்லி அரசால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அம்மாநில ஆம் ஆத்மி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் RRTS எனப்படும் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், RRTS திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் டெல்லி அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தெரியவந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி அரசு கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் விளம்பரத்திற்காக செலவு செய்த நிதி அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து டெல்லி அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சுமார் ரூ.1,073 கோடியை கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் சுதன்சு தூலியா அடங்கிய அமர்வு, “டெல்லி அரசு RRTS திட்டத்துக்கான நிதியை ஒதுக்காததன் காரணமாகவே நாங்கள் விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட நிதியை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தோம். கடந்த 3 நிதி ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் ரூ.1100 கோடி செலவழிக்க முடிகிறது என்றால், நிச்சயமாக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிதி பங்களிப்பு செய்ய முடியும்” என்று குறிப்பிட்டனர்.

அத்துடன் டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வியிடம், “RRTS திட்டத்துக்கு அரசு பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அரசின் விளம்பர பட்ஜெட்டை நாங்கள் பறிமுதல் செய்வோம்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி அளித்த டெல்லி அரசு வழக்கறிஞர், ஆனால் அதற்கு போதிய கால அவகாசம் வழங்கி தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் RRTS திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசு உறுதியளித்ததாக கூறி, அரசின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடனாக இருக்கும் தொகையை செலுத்த உத்தரவிட்டது.