மணிப்பூர் மட்டுமல்லாமல் மிசோரமுக்கும் வன்முறை பரவுவதாக கூறி ஒத்திவைப்பு தீர்மானத்தை ஜோதிமணி எம்பி இன்று நாடாளுமன்றத்தில் முன் வைத்துள்ளார்.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடி ஆகிய இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை நடைபெற்று வருகிறது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. வன்முறையின் போது 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள். 78 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தை திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மணிப்பூர் வன்முறை குறித்து உடனடியாக விவாதிக்க தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்துள்ளேன். மணிப்பூர் மாநிலம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வன்முறை, 142 அப்பாவி உயிர்களைக் கொன்றதோடு குழந்தைகள் உட்பட 60,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிக்கையே சொல்கிறது. மத்திய, மாநில அரசுகளின் செயலற்ற தன்மையும், மௌனமும் அதிர்ச்சியளிக்கிறது. மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மௌனம் சாதித்தார். அவரது சமீபத்திய 30 வினாடிகளுக்கும் குறைவான பேச்சில், மணிப்பூர் வன்முறையின் குரூர தன்மை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மணிப்பூர் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் தவறிவிட்டது.
மற்ற பாலியல் வன்புணர்வு குற்றங்களை மேற்கோள் காட்டி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடும் மணிப்பூர் மாநில அரசின் முயற்சிகள் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி பலாத்காரம் செய்யும் துயர வீடியோவை, இந்திய தலைமை நீதிபதி தானாக முன்வந்து எடுத்து, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறை இப்போது மணிப்பூரின் எல்லைக்கு அப்பால் பரவி வருகிறது, மிசோரத்தில் வசிக்கும் மணிப்பூர் மக்களின் ஒரு பகுதியினர், மிசோரத்தை விட்டு வெளியேறுவது பற்றிய தகவல்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன. மேலும் தாமதிக்காமல் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை. மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அதிகரித்து வரும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்து சமாதானத்திற்கான வழி வகுப்பது நம்முடைய கடமையாகும். எனவே, அமைதியை ஏற்படுத்த மணிப்பூர் வன்முறை குறித்து உடனடியாக அவையில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.