நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்த நீக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற வளாகங்களில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. டாக்டர் அம்பேத்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் சுற்றறிக்கை அனுப்பினார். அதேபோல், அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் அவரது படத்தை வைக்கக் கோரிய கடலூர் வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதித்துறை தலைவர்களும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் மூத்த வழக்கறிஞர் அ.அருள்மொழி கூறுகையில், இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியாகிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப் படங்களை நீதிமன்றங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை அனுப்பியுள்ளார். வழக்கறிஞர்கள் அனைவரும் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் . இன்று மதியம் ஒரு மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வாசல் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.இதனையடுத்து இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு, அம்பேத்கர் படம் நீக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற வளாகங்களில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.