மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொங்கணாபுரத்தை அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சி நாச்சியூரில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றனர். இன்று, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்குவதாக கூறுகின்றனர். இதனால் சாதாரண ஏழை எளிய குடும்ப தலைவிகள் கூட உரிமைத்தொகை பெற முடியாத நிலையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
தமிழக அரசு, தொழில் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கையின்போது கட்டுமான பொருட்கள் அனைத்தும் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தற்போது தக்காளி விலை ஆப்பிள் விலையை விட அதிகமாக விற்பதை நாம் அறிவோம். இந்த விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு திருமண உதவித்தொகை, மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரும் போது இந்த திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.