இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது இடத்திலும் உள்ளது.
பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது. அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான். இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிவசேனா கட்சி எம்.பி. தைர்யஷீல் சாம்பாஜிராவ் மானே, வங்கிக் கடன் வசூல் அணுகுமுறை குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அமைச்சர் மானே ஓர் உணர்வுபூர்வமான பிரச்சினையை அவையில் எழுப்பியுள்ளார். சில வங்கிகள் வாராக் கடன் வசூலில் காட்டும் கெடுபிடி தொடர்பான புகார்களை நான் அறிவேன். அனைத்து பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடன் வசூலில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. வங்கிகள் கடன் வசூலில் மனிதாபிமானம் மற்றும் உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அரசு அறிவுறுத்தியுள்ளது” என்றார்.
சிவ சேனா எம்.பி, மானே, அரசு இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நிதித் துறை இணை அமைச்சர் பக்வத் கிருஷ்ணராவ் காரட், “ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு வாரியம் இருக்கிறது. அவைதான் கடன்களுக்கான வட்டி, கூட்டு வட்டி ஆகியனவற்றை முடிவு செய்கின்றன. அதில் அரசு தலையிடுவதில்லை. ஏழை மக்கள் கடன் வலைக்குள் சிக்கிவிடாமல் இருப்பதற்காகத்தான் அரசு, பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனாவை செயல்படுத்துகிறது. தனியார் அடகுக் கடைக்காரரர்களிடமிருந்து மக்களைக் காக்கவே இத்திட்டம் உள்ளது. சாலையோர கடைக்காரர்களுக்காக ஆத்ம நிர்பார் நிதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா மூலம் அவர்கள் தொழில் முதலீட்டுக் கடனைப் பெறலாம்” என்று பதிலளித்தார்.