டுவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மாற்றிவிட்டார், அதன் உரிமையாளர் எலான் மஸ்க். புதிய லோகோவான ‘X’ உள்ளேயும், பழைய லோகோவான ‘நீலக் குருவி’ வெளியேயும் சென்றுள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டுவிட்டரின் லோகோவை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக ஐடியாவை மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் தனது X கார்ப்பரேஷன் சேவைகளை மஸ்க் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக டுவிட்டர், பேபால் (நிதி சேவை) மற்றும் இன்னும் பிற விஷயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம் என சொல்லப்படுகிறது.
பயனர்கள் பலரும் ‘டுவிட்டர் லோகோவின் பயணம்’ என ஒரு படத்தை ரீ-ட்வீட் செய்து ட்ரெண்டாக மாற்றி வருகின்றனர். அது 2006 முதல் தொடர்ச்சியாக டுவிட்டர் நிறுவன லோகோவின் படிப்படியான மாற்றங்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.