புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியது. இந்த புதிய தலைமை செயலகம் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஓராண்டு தான் சட்டசபை அங்கு நடந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் புதிய தலைமை செயலகம் செயல்படவில்லை. சென்னை கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் தான் சட்டசபை கூட்டங்கள் நடக்க தொடங்கின. அதேநேரம் 2011ல் அப்போது புதிதாக பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறியது. மேலும் அது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷனும் அமைத்தது.
இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மேலும், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும் 2018-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் பொதுப் பணித் துறைக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறை காட்ட மறுக்கிறது. எனவே, 2018-ம் ஆண்டு தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான, மேல் முறையீட்டு வழக்கில் என்னையும் இணைக்க வேண்டும் என்று மனுவில் ஜெயவர்த்தன் கோரியுள்ளார்.