மேகாலயா மாநிலத்தில் முதல்வர் கான்ராட் சங்மா முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் திரிணாமுல் காங்கிரஸ்; 7 பேர் பாஜக நிர்வாகிகள்.
மேகாலயா மாநிலத்தில் காசி மலைப்பகுதி மக்கள், துரா நகரத்தை மேகாலயா மாநிலத்தின் குளிர்கால தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து 13 நாட்களாக A’chik Conscious Holistically Integrated Krima (ACHIK) என்ற அமைப்பினர் அமைதிவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்திருந்தது. இக்கோரிக்கை தொடர்பாக துராவில் போராட்ட குழுவினருடன் முதல்வர் கான்ராட் சங்மா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முதல்வர் இல்லத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் 5 போலீசார் படுகாயமடைந்தனர். சுமார் 1 மணிநேரம் வீட்டை விட்டு முதல்வர் கான்ராட் சங்மா வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேகாலயாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் துரா நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை; அடையாளம் தெரியாத நபர்களே தாக்குதல் நடத்தினர் என போராட்டக் குழுவினர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வீடியோ பதிவுகள் மூலம் முதல்வர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 171 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்; 7 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என மேகாலயா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த போலீசார் எண்ணிக்கை 10 ஆகவும் அதிகரித்துள்ளது.