கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில், சென்னையிலும் லுலு மார்க்கெட் திறக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், வணிகர் சங்கங்கள் கொந்தளித்து போயுள்ளன.
தமிழ்நாட்டின் முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்டது. கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், இதற்கான பணிகள் துரிதமாகவே நடந்து முடிந்து, 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. ஏற்கனவே, நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பல இடங்கள் கோவையில் இருந்தாலும், அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன..
20-க்கும் மேற்பட்ட பில்லிங் கவுண்டர்கள் இருந்தபோதிலும், வரக்கூடிய மக்களை சமாளிக்க முடியாத அளவில் கூட்டம் இருப்பதால் பொருட்களை ஷாப்பிங் செய்தாலும் பில்லிங் போடுவதற்கு உள்ள வரிசைகளை பார்த்து கஸ்டமர்கள் பயந்தார்கள்.. அந்த அளவுக்கு இந்த லுலு மால். விற்பனை சூடுபிடித்து வருகிறது. இதனால், மற்ற நகரத்திலுள்ள மற்ற ஷாப்பிங் மார்க்கெட்டுகள், மால்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. அதிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இனி சென்னையிலும் லுலு வரப்போகிறதாம். இதைத்தவிர, கோவை மாவட்ட மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் ஆகிய 2 இடங்களில் உணவு பதப்படுத்தும் மையம் அமைய உள்ளதாம்.. தஞ்சாவூர் பகுதியில் “மார்டன் ரைஸ் மில்” அமைத்து, சர்வதேச அளவில் அரிசி பேக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்ய திட்டமிருக்கிறதாம்.. இதனால், கோவை பகுதிகளில் 700 பேருக்கு கோவையில் ஹைப்பர் மார்க்கெட்டில் வேலைவாய்ப்பு தரப்படும் என்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் லுலு கால் பதிக்க போவதாக கூறியுள்ளதற்கு, அன்றே வணிகர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது..
இது தொடர்பாக முதல் அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவும் விக்கிரமராஜா ஏற்கனவே கூறியிருந்தார். லுலுவால், சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். சென்னையில் லுலு மால் திறக்க அனுமதிக்க மாட்டோம்.. வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம்” என்று உறுதிபட கூறியிருந்தார் விக்கிரமராஜா.
இந்நிலையில் லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டை விட்டே விரட்டும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இன்று காலையில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகையிட வணிகர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. அதைத்தொடர்ந்து மறியலும் நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், பொதுச் செயலாளர் பெருங்குடி சவுந்தரராஜன், போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், உடபட 1000-க்கும் மேற்பட்ட வணிகர்களை போலீசார் கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.