சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் 6-ந்தேதி சென்னை வருகிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு படிப்பை முடித்துவிட்டு பட்டங்களை பெற காத்திருக்கும் மாணவ-மாணவிகளிடம் இருந்து வந்தது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா அரங்கில் பட்டமளிப்பு விழா வழக்கம் போல நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவரும் இதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சென்னைக்கு முதல் முறையாக வரவுள்ளார். ஏற்கனவே சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதில் அவர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். விழாவில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், தரவரிசையில் சிறந்த இடம் பிடித்த மாணவ-மாணவிகள் பட்டங்களுடன், விருதுகள் மற்றும் பரிசுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பெற இருக்கின்றனர். விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இணை வேந்தரும், உயர்கல்வி துறை அமைச்சருமான க.பொன்முடி, பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். பட்டமளிப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை பல்கலைக்கழகம் தீவிரமாக செய்து வருகிறது.