சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது. இந்த இடத்தில், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதோடு, அதில் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதி நிஷாபானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பரிந்துரைத்திருந்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று, இரு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிஷாபானு, “இந்த வழக்கைப் பொறுத்தவரை, சொல்வதற்கு ஏதுமில்லை. இந்த வழக்கில் ஏற்கெனவே நான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீதிமன்ற காவலை முடிவு செய்வதற்காகத்தான் மூன்றாவது நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிட பரிந்துரைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும். எனவே, இந்த வழக்கை இங்கு நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.