ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் போராட்டத்திற்கு வந்து ஆதரவளித்த சோனியா காந்தி!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை எதிர்த்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது கலவரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, அம்மாநிலத்தில் 53 சதவிகிதம் உள்ள மெய்தி மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தனது தேர்தலுக்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, மெய்தி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. எதிர்பார்த்தபடி இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், மெய்தி மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.

இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல நாடாளுமன்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கடந்த 24ம் தேதி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை அவர் மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது.

இந்நிலையில் தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை நேரில் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியின் உறவு அவ்வளவு நெருக்கமானதாக இல்லை. காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பஞ்சாபில் ஆம் ஆத்மி தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதேபோல டெல்லி உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் காலியானதற்கு ஆம் ஆத்மிதான் காரணம். இப்படி தனது இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து வந்த ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் பட்டும் படாமல் தள்ளி நின்று வந்தது. ஆனால் தற்போது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாகி வரும் நிலையில் ஆம் ஆத்மியுடன் கைகோர்த்திருக்கிறது. டெல்லி அரசுக்கு எதிராக பாஜக கொண்டு வரும் முடிவுகளை எதிர்க்கும் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று கூறியதையடுத்து இந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சஞ்சய் சிங்குக்கு சோனியா காந்தி ஆதரவளித்துள்ளார்.