ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஐபிஎல் அமைப்பு 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 இந்திய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பிரான்சிஸ் முறையில் இதில் கலந்து கொள்கின்றன. அணியில் ஒவ்வொரு வீரர்களும் பெரும் தொகை கொடுத்து இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 2020ம் ஆண்டில் ரூ.51062 கோடியாக கணக்கிடப்பட்டது. 2022 இல் இதன் மதிப்பு ரூ.90038 கோடியாக உயர்ந்தது. தற்போது (2023) இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 1.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணிக்ககப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளது. கடந்த 2013-ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது, கோடிக்கணக்கில் மேட்ச் பிக்சிங் நடந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த மேட்ச் பிக்ஸிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் சில வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. ஐபிஎல் சூதாட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் லோதா மற்றும் முத்கல் குழுவை அமைத்தது. அந்தக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சூதாட்டம் மற்றும் முறைகேடுகளை தடுக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்த விதிகளையும் உருவாக்கவில்லை என்பதால், சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இந்தப்போட்டிகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, லோதா குழு பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும், இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது தெரிந்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய குழுவை அனுகி புகார் கொடுத்து நிவாரணம் பெறலாம் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.