ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்: டிடிவி தினகரன்!

வரும் தேர்தலில், பாஜக கூட்டணியில் அமமுக இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அமமுக போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்திலும் ஆளும் திமுக, எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளை இலைமறைக்காயாய் ஆரம்பித்து விட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாளை முதல் நடைபயணம் மேற்கொள்கிறார். தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் விதமாக அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை அமையும் என்று அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு இருவருக்குமே மங்கி விட்டதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருவரையும் கூட்டணியில் இணைக்க அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றி நீங்கள்தான் கூற வேண்டும். அண்ணாமலை ஒரு கட்சியின் தலைவர், அதனால் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். திமுகவின் 2-வது ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது குறித்து முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலை ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் ஓ பன்னீர் செல்வத்துடன் சேர்ந்துதான் பயணிப்போம். அண்ணாமலை தனது நடைபயணத்திற்கு என்னை அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். பாஜக கூட்டணியில் அமமுக இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.