போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது: விஜயகாந்த் கண்டனம்!

விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது. தடகள விளையாட்டு வீரரான மாணவர் விக்னேஷுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்தவர் பரிதி விக்னேஸ்வரன். கல்லூரி மாணவரான இவர் ஜூடோ விளையாட்டு வீரராவார். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார். அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்த இவருக்கு தற்போது ஒரு கால் பறிபோயுள்ளது. அதாவது, கோச்சடை பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு பரிதி நடந்து சென்றிருக்கிறார். அப்போது அந்த பகுதியில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன. இந்நிலையில் கோச்சடை பகுதியில் தனது நண்பர் வீட்டுக்கு பரிதி சென்ற போது அங்கு பழுதான மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின் கம்பம் ஒன்று இவரது கால் மீது விழுந்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிதியை பரிசோதித்த மருத்துவர்கள் இவரது கால் முறிந்துள்ளதாக கூறியுள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணியில் ஈடுபடாததுதான் விபத்தக்கு காரணம் என்று பொதுமக்களும் பரிதியின் பெற்றோரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தனது மகனுக்கு நிவாரணத்துடன் கூடிய அரசு வேலை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இவரது கோரிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பரிதி விக்னேஸ்வரனுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், “விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது. மாணவர் பரிதி விக்னேஸ்வரனுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் கவனக்குறைவாக செயல்பட்டு மாணவரின் கால் பறிபோக காரணமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.