ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் திடீரென அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியது. இதனால் அதிபர் முகமது பாசுமை ராணுவம் சிறை வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் நைஜர் ராணுவ வீரர்கள் குழு அங்குள்ள அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினர். அப்போது, கைது செய்யப்பட்ட அதிபர் முகமது பாசும் தனது பதவியில் இருந்து அகற்றப்பட்டு உள்ளார். எனவே அங்கு ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டு உள்ளது என வெளிப்படையாக அறிவித்தனர். மேலும் இது தங்களது உள்நாட்டு விவகாரம். எனவே மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என அவர்கள் கூறினர்.
இதற்கிடையே அங்குள்ள தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் முற்றிலும் முடக்கப்பட்டன. நாட்டில் இயல்பு நிலை திரும்பும்வரை அங்கு வான் மற்றும் தரை எல்லைகள் மூடப்படும் எனவும், இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் ராணுவத்தினர் அறிவித்தனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் தலைநகர் நியாமியில் போராட்டம் நடத்தினர். ஆனால் ராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை கலைத்தது. இதனால் நைஜர் ராணுவத்துக்கு அமெரிக்கா, ஆப்பிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன.
அதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறுகையில், `ஜனநாயகத்துக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து செயல்களையும் ராணுவத்தினர் நிறுத்த வேண்டும். மேலும் அதிபர் முகமது பாசுமை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த நைஜர் நாடானது கடந்த 1960-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அங்கு அரசியல் வன்முறை காரணமாக இதற்கு முன்னரும் 4 முறை ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.