மது வியாபாரத்தை அதிகப்படுத்துவது அரசின் நோக்கம் கிடையாது: அமைச்சர் முத்துசாமி!

மது வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது என்றும், அது சார்ந்து எதை பேசினாலும் தவறான கருத்துகள் பரப்பப்படுவதால் பேசவே பயமாக இருக்கிறது என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் வெளியிட்டதாக வலம் வரும் ஆடியோ தவறானது. இதுதொடர்பாக கட்சியின் தலைமை வரை விசாரித்து உண்மை கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆடியோவை தவறாக திரித்து போட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக் கடைகளில் எந்த தவறும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நடப்பது ஒழுங்காக நடக்க வேண்டும். அதில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. விற்பனையை குறைக்கும் நடவடிக்கையுடன், மதுப்பழக்கத்துக்கு ஆளாகி அடிமையானவர்களை மீட்க வேண்டும் என்றும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. மீட்பு நடவடிக்கை என்பது குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்களை கேவலப்படுத்தாமல், நியாயமாக அவர்களை அணுகி, அவர்களே புரிந்து கொண்டு மனமாற்றம் அடையச்செய்வதாகும்.

டாஸ்மாக் மது வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது. இதுதொடர்பாக கூறப்படும் கருத்துகள், எடுக்கப்படும் அணுகுமுறைகளை திரித்து தவறான கருத்துகள் அதிகம் பரப்பப்படுவதால் பேசுவதற்கே பயமாக உள்ளது. மதுபாட்டில்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் தரப்பில் ஏராளமான புகார்கள் வந்தன. எனவே ‘டெட்ரா பேக்’ எனப்படும் அட்டைக்கூடுகளில் மதுவை அடைத்து விற்பது தொடர்பான கருத்து என்ன என்பதை மட்டுமே கேட்டோம். அதையும் தவறான பரப்புரை செய்கிறார்கள். விவசாயிகள் கூறும் புகார்களை ஆய்வு செய்வது, அதற்கு மாற்று என்ன என்று கருத்து கேட்பது தவறல்ல. அதுமட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளில் புதிதாக மது வாங்க வருபவர்கள், இளம் வயதினர் வருவது தெரிந்தால், அவர்களுக்கு அறிவுரை வழங்க ஏதுவாக தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் புதிதாக மதுக்குடிப்பவர்களை தடுக்கும் அணுகுமுறை எடுக்கப்படுகிறது. ஆனால் எதை செய்தாலும் தவறான பிரசாரம் செய்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.