இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா, தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி: ஆர்.பி உதயகுமார்

அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய உதயகுமார், “இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்றும் தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி” எனவும் பேசினார்.

‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கினார். 234 தொகுதிகளிலும் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்கிறார். 168 நாட்கள் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த பாத யாத்திரையில், பல ஊர்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பாதயாத்திரை பயணத்தின் தொடக்கவிழா ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பாதயாத்திரை துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று அண்ணாமலையின் நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் பங்கேற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை அனுப்பி வைத்து இருந்தார்.

ஆர்.பி உதயகுமார், அண்ணாமலையின் பாத யாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

சர்தார் வல்லபாய் படேலை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வரலாற்றிலே படித்து இருக்கிறோம். அதே கொள்கையோடு, லட்சியத்தோடும் இன்றைக்கும் வாழும் இரும்பு மனிதராக இருக்கும் அமித்ஷா இங்கு வருகை தந்து இருக்கிறார். இரும்பு மனிதர், கரும்பு மனிதராக இருக்கும் அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். இதை வாழ்த்துவதற்காக சாமானியமானவனாக வந்து இருக்கிறேன். கிளைக்கழக செயலாளராக இருந்து 2 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்கும் தமிழ்நாட்டின் இரும்பு மனிதராக இருக்கும் தி அயர்ன் மேன் ஆப் தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்து இருக்கிறேன்.

பாரத பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வர வேண்டும் என்று டெல்லியிலே ஊடகத்திடம் எடப்பாடி சொன்னார். உடனே ஊடகத்தினர் கேட்கிறார்கள்.. ஏன் பிரதமராக மோடி வரவேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று? அதற்கு திருக்குறளை போன்று இரண்டு வரிகளில் சொன்னார்.. மோடி தலைமையில் வளர்ச்சி மிகுந்த இந்தியாவை இந்த 9 ஆண்டுகளில் பார்க்கிறேன் என்று சொன்னார். ஜெயலலிதா மீது மோடியும் அமித்ஷாவும் மிகுந்த மரியாதை வைத்து இருப்பார்கள். புரோட்டாக்காலை உடைத்துக் கொண்டு ஜெயலலிதாவின் வீட்டிற்கே தேடிச்சென்று, அவரோடு கருத்துக்களை பரிமாறிக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு விவாதங்களை மேற்கொண்ட வரலாறு இந்த தமிழகத்திற்கு உண்டு. பிரதமர் மோடி இந்தியாவை உலக அளவில் தலை நிமிர செய்துள்ளார். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டிற்கு செல்வதற்கும் அதற்கு முன்பு வெளிநாட்டிற்கு செல்வதற்கும் கொடுக்கப்பட்ட மரியாதை மாறியுள்ளது. முன்பு கடமைக்காக மரியாதை கொடுக்கப்பட்டது. இப்போது அன்புக்கான மரியாதை என்ற அங்கீகாரத்தை நாட்டுக்கு மோடி பெற்று தந்து இருக்கிறார். அரசியல் அதிகாரம் கருணாநிதி குடும்பத்தின் நிரந்தர சொத்தாக மாறி விடக்கூடாது என அதை தடுத்து நிறுத்துவதற்காக மோடியின் தூதுவராக அமித்ஷா வந்துள்ளார். அரசியல் அதிகாரத்தை மீட்டு எடுப்பதற்கு இந்த கூட்டணி அவசியம், தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.