பூமியில் இந்த ஜூலை மாதம் கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டதாக ஐ.நா.வும், ஐரோப்பிய யூனியனும் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பும், ஐரோப்பிய யூனியனின் கபா்நிகஸ் பருவநிலை மாற்ற சேவை அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட மத்தியதரை பருவ மண்டல நாடுகளில் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், அந்தப் பகுதியிலும், பெருங்கடல் பகுதியிலும் இதுவரை காணாத அளவுக்கு மிக அதிக அளவு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஜூலை மாதம்தான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட மாதமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த மாதத்தின் 3 வாரங்கள், கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் மிக அதிகமாக வெப்பம் நிலவிய வாரங்களாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் அண்மையில் வீசிய ‘சா்பரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள ‘எதிா்ப் புயல்’ காரணமாக அங்கு வெப்ப அலை வீசி வருகிறது. பொதுவாக, வளிமண்டலத்தில் ஏற்படும் குறைந்த அழுத்த மண்டலத்தைச் சுற்றிலும் காற்று வேகமாகச் சுழல்வதை புயல் என்கிறோம். அதுவே, உயா் அழுத்த மண்டலம் உருவாகி, அதைச் சுற்றிலும் காற்று மெதுவாக சுழல்வது ‘எதிா்ப் புயல்’ என்று கூறப்படுகிறது.
புயலின் மையப் பகுதி வேகமாக நகா்ந்து செல்லும். ஆனால், அதற்கு எதிரான தன்மை கொண்ட எதிா்ப் புயலின் மையப்புள்ளி மிக மிக மெதுவாக நகரும். சில பகுதிகளில் அது தற்காலிகமாக நிலைத்துகூட நின்றுவிடும். அதுபோன்ற நேரங்களில் காற்றில் ஏற்கெனவே இருக்கும் வெப்பம் இன்னும் அதிகரித்து அந்தப் பகுதிகளில் அதீத வெப்பநிலை ஏற்படும். அதைத்தான் வெப்ப அலை என்கிறோம்.
தற்போது ஐரோப்பாவிலும், அது அமைந்துள்ள மத்தியதரை பருவமண்டலப் பகுதிகளிலும் ‘சா்பரஸ்’ எதிா்ப் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு ‘கேரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக இத்தாலியின் பல்வேறு நகரங்களுக்கு அந்த நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டில் வீசிய வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 70,000 போ் பலியாகினா். அதன்பிறகு அங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 62,000 போ் உயிரிழந்தனா். பொதுவாக, அதிக வெப்ப நிலையால் வயோதிகள், உடல்நலக் குறைவு உள்ளவா்கள் போன்றோரின் உயிரிழப்பு அபாயம்தான் அதிகமாக இருக்கும். ஆனால், வெப்ப அலையால் ஆரோக்கியமான மனிதா்கள்கூட இறக்கும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையானது, உலக உணவு நெருக்கடியை மோசமாக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக உலக நாடுகள் வறட்சியையும், வெள்ள பாதிப்பையும் சந்தித்து வருகின்றன. அதன் வெளிப்படாக அரிசி, தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை இந்தியா தடைச் செய்துள்ளது. இந்த நிலையில், அதீ திவிர வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் தானியங்களின் உற்பத்தி 60% குறைந்துள்ளதாகவும், கடும் வெப்பம் ஐரோப்பாவை வாட்டி வதைப்பதாகவும் ஐரோப்பிய விவசாய அமைப்பான கோபா கோகெகா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், கடினமான காலம் இன்னும் முடியடையவில்லை என்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் எச்சரித்தார். இதற்கிடையில், ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, உலக உணவு நெருக்கடி இன்னும் மோசமாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றன.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை சர்வதேச நாணய நிதியம் (IMF) அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது. இந்தக் கட்டுப்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான ஆலிவர் பேசும்போது, ”இந்தக் கட்டுப்பாடுகள் உலகின் பிற பகுதிகளில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கத்தை அதிகரிக்கக் கூடும்” என்றார்.
இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஜூலை 20-ஆம் தேதி தடை விதித்தது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலிருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.