அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்குகிறார் பிரதமர் மோடி: அமித்ஷா!

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கிக் கொண்டிருக்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

ராமேசுவரத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற அப்துல் கலாமின் ‘நினைவுகள் மரணிப்பதில்லை’ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்தாலும், திறமையிருந்தால் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியையும் ஒருவர் அடைய முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். இந்தியா ஒரே தேசம் என்பதை உணர்ந்து மொத்த திறனையும் முன்னிலைப்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி வேண்டும். தொழில் வளர்ச்சியுடன் விவசாயத்தையும் ஊக்குவித்து கிராம, நகர வளர்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அப்துல் கலாம். அதை தற்போது நடைமுறைப்படுத்தி அவரது கனவை நனவாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. உயர் பதவியில் இருந்தாலும் எளிமையாக ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை உறுப்பினர் கீதா பாரதி ஜெயின், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இணைவேந்தர் ரவி பச்சமுத்து, ‘அப்துல் கலாமின் நினைவுகள் மரணிப்பதில்லை’ ஆசிரியர்களில் ஒருவரும் அப்துல் கலாமின் சகோதரர் மகளுமான நசீமா, அவரது உறவினர்கள் ஷேக் தாவுது ஷேக் சலீம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து, அமித் ஷா, அப்துல் கலாமின் இல்லத்துக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

பின்னர், குந்துக்கால் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்றார். சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு சில நிமிடங்கள் அவர் தியானம் மேற்கொண்டார். அங்கு, மதிய உணவை நிறைவு செய்து கொண்ட அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’யாத்திரையை தொடக்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து நேற்று மாலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் அவர் பேசினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார். இதனையடுத்து இன்று காலை 5:45 முதல் 7 மணி வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் கிழக்கு கோபுர வாயிலில் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி சுவாமிகளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தை பார்வையிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயர், 21 தீர்த்தங்கள் உள்ளிட்ட பிற தரிசனங்களை மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரும் தரிசனம் செய்தனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே தனது ராமேஸ்வரம் பயணம் குறித்தும் ராமநாதசுவாமி கோவில் தரிசனம் பற்றியும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமித்ஷா. ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் என்று பதிவிட்டுள்ளார் அமித்ஷா.

இதனைத் தொடர்ந்து அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்ட அமித்ஷா அதனையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடத்திற்குச் செல்வது ஒவ்வொரு தேசபக்தரின் கனவாகும். மகத்துவம் என்பது ஒருவரின் உடைமையில் இல்லை, தேசத்திற்கு ஆற்றும் பங்களிப்பில் உள்ளது என்ற எண்ணத்தின் சான்றாக வாழ்ந்த மாபெரும் அறிஞர், விஞ்ஞானி, நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்திய போது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமித்ஷா தனது மற்றொரு டுவீட்டில், மனிதகுலத்தின் நன்மைக்காக கனவு காணவும், சிறந்து செயல்படவும் இந்தியாவுக்கு கற்றுத் தந்தவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரது வழியில் நடந்தால், அது இன்று நிறைவேறுவதைக் காண முடியும். ‘டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மெமரீஸ் நெவர் டை’ என்ற புத்தகம் இன்று ராமேஸ்வரத்தில் வெளியிடப்பட்டது, எழுத்தாளர்கள் நம்மை அவரது நினைவுப் பாதையில் அழைத்துச் சென்று புதிய தலைமுறையினருக்கு புதிய உயரங்களை தொட அவர் கண்ட கனவுகளை நம்மிடைய எடுத்துக்காட்டுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு சென்ற அமித்ஷா அதனையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சுவாமி விவேகானந்தரின் தெய்வீக ஞானத்தின் அருளால் அருளப்பட்ட புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை பார்வையிட்டேன். இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் அனைவரும் ஆன்மீகம் என்ற ஒரே இழையோடு ஒன்றி பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இந்தியாவை ஒரு புதிய ஆன்மீக மறுமலர்ச்சிக்கு விழித்தெழுப்பிய மகா துறவிக்கு எனது வணக்கத்தை செலுத்தினேன் என்று பதிவிட்டுள்ளார்.