பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன்

கணித வல்லுநரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கருத்து தெரிவித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு பாசிச நடவடிக்கை என விமர்சித்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியதாவது:-

கிழக்கு பதிப்பக உரிமையாளரும், எழுத்தாளருமான திரு. பத்ரி சேஷாத்ரி இன்று (29-7-2023) அதிகாலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக யூ-டியூப் சேனல் ஒன்றில் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசின் தவறுகளை, அடக்குமுறைகள் குறித்து யாரும் பேசிவிட, எழுதிவிடக் கூடாது என்பதற்காக, திமுக அரசை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுபவர்களை எல்லாம் திமுக அரசு செய்து வருகிறது. ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமை பற்றியெல்லாம் திமுகவினர் மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால், ‘இம்’ என்றால் சிறைவாசம். ‘ஏன்?’ என்றால் வனவாசம் தான். பேசுவதற்கு, எழுதுவதற்கு, சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுவதற்கெல்லாம் கைது செய்யப்பட வேண்டுமெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் நிரந்தரமாக சிறையில் தான் இருக்க வேண்டும்.

பத்ரி சேஷாத்ரி அவர்கள், கிழக்கு பதிப்பகம் மூலம், தமிழ் பதிப்பக துறையில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர். கணிதத்தில் நிபுணரான அவர், கணிதம் தொடர்பாக தமிழில் பல புத்தகங்களை எழுதி இருப்பவர். சமூகத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக துணிச்சலுடன் தனது கருத்துக்களை தெரிவித்து வருபவர். திமுகவுக்கு மாற்றான சிந்தனைகளை முன் வைக்கிறார். திமுக அரசின் தவறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் என்பதனாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது அப்பட்டமான அடக்குமுறை. ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை. அடக்குமுறை மூலம் அரசுக்கு எதிரான குரலை ஒடுக்கி விடலாம் என்று நினைப்பது நடக்கவே நடக்காது. இது தொழில்நுட்ப யுகம். ஒவ்வொரு நொடியும் நடக்கும் உண்மைகளை மக்கள் அறிந்து கொண்டே இருக்கிறார்கள். பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி மக்களை இனி ஏமாற்ற முடியாது. எனவே, பாசிச நடவடிக்கைகளை கைவிட்டு பத்ரி சேஷாத்ரி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மக்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவில் புதிய நபர்களை சேர்ப்பதற்கும், மாநிலம் முழுவதுமே கட்சியின் வளர்ச்சிக்கும் இந்த பாதயாத்திரை பெரிதும் பயன்படும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருவதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் வெளிப்பாடாகவே, பாஜகவின் இந்த பாத யாத்திரையை பாவ யாத்திரை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக தினம் தினம் செய்து கொண்டிருக்கும் பாவத்தை அளவு எடுத்தால், முதல்வரெல்லாம் ‘பாவம்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் மூலமாக எத்தனை பெண்களின் பாவங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

இப்படி திமுக செய்யும் பாவங்களை கணக்கிட்டால் அது பெரிய பாவக் கடலாக தான் இருக்கும். நாங்க பாவ யாத்திரை என்றால் திமுக ஒரு பாவக்கடல். அந்தப் பாவக்கடலில் மூழ்கப்போகும் முதல் நபர் நமது முதலமைச்சர் ஸ்டாலினாக தான் இருப்பார். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.