சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது என்றும் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காடுகளின் காவலன் என்று அழைக்கப்படும் விலங்கு புலி. இந்தியாவின் தேசிய விலங்காகவும் அறிவிக்கபப்ட்டு புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினத்தில் இருந்து புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. உலகில் மொத்தம் வசிக்கும் புலிகளில் 75 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன. இந்தியாவில் புலிகள் அதிகம் வசிப்பது மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான். புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் தான், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம் எனப்பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.