பாஜக ஏன் அதிமுக ஆட்சியின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை: முத்தரசன்

ஊழலைப்பற்றி பேசும் பாஜ அரசு ஏன் அதிமுக ஊழலை பற்றி பேசுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நேர்வழியில் ஆட்சியில் அமர முடியாத பாஜ குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைக்கிறார்கள். குறுக்கு வழி ஒருபோதும் வெற்றி பெறாது. மக்கள் அவர்களை நிராகரித்து அவர்களின் எண்ணங்களை முறியடிப்பார்கள். பாத யாத்திரை என்றால் நடந்து செல்ல வேண்டும். ஆனால் குளிரூட்டப்பட்ட வாகன வசதியுடன் சென்று விளம்பரம் தேடும் முயற்சியில் தமிழக பாஜ ஈடுபட்டுள்ளது.

ஊழலைப் பற்றி பேசும் பாஜ அரசு, ஏன் அதிமுக ஆட்சியின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை? குட்கா ஊழலின் டைரியும் கிடைத்தது. அது சம்பந்தமாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக விலைவாசி உச்சத்தை எட்டி உள்ளது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது. இதை கண்டித்து செப்டம்பர் 12, 13, 14 தேதிகளில் ஒரு லட்சம் பேரை திரட்டி ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.