மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய்: கனிமொழி

எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அடங்குவர்.

மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தற்போதைய கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் மணிப்பூர் சென்றது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை, எம்.பி.க்கள் குழு சந்தித்தது. இதற்கிடையே, இந்தக் குழுவினர் நேற்று டெல்லி திரும்பினர்.

டெல்லி திரும்பிய பிறகு தி.மு.க. கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்துப் பேசினோம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை. தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே உதவவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் கூறினர். மணிப்பூரில் உள்ள முகாம்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் மாநில அரசு மீது நம்பிக்கையை இழந்துள்ளனர். மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை, மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய். மணிப்பூரில் நிரந்தர அமைதி உருவாவதற்கான சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக எம்.பி.க்கள் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை தொடர்பான கள நிலவரத்துடன் தங்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசுவதற்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அப்போது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மக்கள் எழுப்பும் பிரச்சனைகளையும், மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளையும் முன்வைப்போம். காலதாமதம் செய்யாமல், எங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துமாறு இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், இது தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.