சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினமும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசுவது நமக்கு பிரசாரமாக அமைந்து கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை தியாகரய நகரில் நன்னன் குடி அமைப்பு சார்பில் பேராசிரியர் மா. நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
நீதிக்கட்சியில் நுழைந்து திராவிடக் கட்சியில் செயல்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டவர் நன்னன் என்பதன் அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. புலவர் நன்னன் அகமும், புறமும் அப்பழுக்கற்றவாக,நேர்மையானவராக விளங்கியவர். நன்னன் மறைந்தாலும் அவரது பெயரால் புத்தகங்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. நன்னனின் புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும். நன்னன் 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கி தந்து சென்றிருக்கிறார். கருணாநிதியின் வாரிசு என்றால் நான் மட்டுமல்ல, திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிற அனைவரும் கருணாநிதியின் வழித்தோன்றல்கள்தான். இந்த வழித்தோன்றல்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள். அடக்குமுறைக்கு வழித்தோன்றல்கள் இருப்பது போல, விடுதலை இயக்கத்துக்கும் எப்போதும் வழித்தோன்றல்கள் இருப்பார்கள்.
இந்தியாவை கபளீகரம் செய்ய சனாதன, வர்ணாசிரம சக்திகள் துடித்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் தந்தை பெரியாரின் எழுத்துக்களை 21 மொழிகளில் கொண்டு வருவதற்கு நாம் முன்னெடுப்புகளை செய்து கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டுக்கு ஒரு பெரியார் என்பதை போல மற்ற மாநிலங்களுக்கு இல்லை. எங்களுக்கு பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே.. என்ற ஏக்கம் இன்றைக்கு மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. சனாதனம், வர்ணாசிரமம் குறித்து தினமும் நம்முடைய ஆளுநர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவது நமக்கு ஒரு பிரசாரமாக அமைந்து வருகிறது அது வேற.. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் சொல்லி இருக்கிறேன், அவரே ஆளுநராக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய கொள்கையை நாம் வளர்க்க முடியும். நம்முடைய பிரசாரத்தை சிறப்பாக செய்ய முடியும். தினந்தோறும் தவறான பாடங்களை ஆளுநர் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசி வருவது நம்முடைய கொள்கைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறது. அண்ணா சொன்னார், வாழ்க வசவாளர்கள். அதைதான் நான் இப்போது சொல்ல வேண்டி உள்ளது.
எனது எதிரிகள் தான் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள் என்று பெரியார் சொன்னார். அத்தகைய எதிரிகளுக்கு பதில் சொல்வதற்கு நன்னனின் எழுத்துக்கள் நமக்கு அதிகமாக பயன்படும். எப்படி எழுத வேண்டும்.. எப்படி பேச வேண்டும் என்பது மட்டும் அல்ல.. எப்படி வாழ வேண்டும் என்பதையும் நமக்கு நன்னன் கற்றுக் கொடுத்தார். வாழ்நாள் எல்லாம் கொள்கைகாக வாழ்ந்தார்.. கொள்கையின் அடையாளமாகவே வாழ்ந்தார். தன்னுடைய குடும்பத்தையும் கொள்கைகளையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தார். மரணம் நெருங்கும் போது சொன்னார்.. எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது.. நிறைவாழ்க்கை வாழ்ந்துவிட்டேன் என்று சொன்னார். தனக்கு பின்னால் தனது செயலை குடும்பம் தொடர்ந்து செய்ய வழிகாட்டினார். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.