பயிரிட வேண்டாம் என முன்பே சொல்லிவிட்டோம்: என்எல்சி நிர்வாகம் விளக்கம்!

பருவமழையால் பரவனாற்றின் நிரந்தர ஆற்றுப்பாதையை முடிக்க வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல் வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26-ந்தேதி என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது. விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு பரவனாறுக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணி நடந்தது. இத்ற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் 20 போலீசார் காயமடைந்தனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், என்.எல்.சி நிர்வாகம் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

கால்வாய் பணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களின் பெயர்களில் இழப்பீடுக்கான காசோலைகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிதாக பயிர் செய்ய வேண்டாம் என்று நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. பரவனாறு நிரந்தர கால்வாய் அமைக்கும் பணியின் போது சிறிய அளவிலான நிலம் பாதிக்கப்பட்டது. உரிய இழப்பீடுகள் வழங்கி நிரந்தர மாற்றுப்பாதைக்கான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளன. நிரந்தர மாற்றுப்பாதையில் ஏற்கனவே 10.5 கி.மீட்டருக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் வற்றாத நீரை பெறும். பரவனாற்றில் தற்போதைய நிரந்தர கால்வாய் அமைக்கப்படும் பட்சத்தில், இந்த சீரமைப்பில் உள்ள அனைத்து விவசாய வயல்களும் வற்றாத பாசனத்திற்கு மிகுதியான தண்ணீரைப் பெறும். தற்போதுள்ள 25 ஆயிரம் ஏக்கருக்கு அப்பால் புவனகிரி வரை ஆண்டுக்கு 2 முதல் 3 பயிர்களுக்கு பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்கும். பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது, சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது.

பொருத்தமான இழப்பீடு ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே வழங்கப்பட்டிருந்தாலும் கூட , நில உரிமையாளர்களின் எதிர்ப்பின் காரணமாக நிலத்தின் உடைமையை பெறமுடியாமல், அவர்கள் விவசாயத்தைத் தொடர்ந்தனர். பரவனாரின் நிரந்தர மாற்றுப்பாதை பணிகளுக்கு நிலத்தின் தேவை குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. பரவனாறு பாதையில் இருந்து 60 மீட்டர் தொலைவில் சுரங்கம் -2 வெட்டு முகத்தின் முக்கியத்துவத்தை எட்டியுள்ளதால், பருவமழை விரைவில் வருவதைக் கருத்தில் கொண்டு பரவனாற்றின் நிரந்தர ஆற்றுப் பாதையை முடிக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது. சுரங்கம் மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இவ்வாறு என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.