நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி சுரங்க விர்வாக்க பணிகளுக்காக பரவனாற்றுக்கு என்.எல்.சிக்கு சுரங்க நீரை எடுத்து செல்லும் வகையில் வளையமாதேவி பகுதியில் விளை நிலங்களில் கனரக வாகனங்களை ஏற்றி கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிறுவனம் தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாமக இதனை கண்டித்து போராட்டம் முன்னெடுத்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலங்கள் கடந்த 2011ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டாலும் 14ஆண்டுகளுக்கு பின்னர்தான் நிலத்தை பயன்படுத்துகிறார்கள். எனவே அந்த நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்ட என்.எல்.சி நிறுவனத்தின் இழப்பீட்டை இரண்டு மடங்காக உயர்த்தி 30 ஆயிரமாக கொடுப்பதாக தமிழ்நாடு அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயி என்ற முறையில் ஏக்கருக்கு 81 ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டதுடன். ஒரு விவசாயியின் வலி என்ன என்பது என்.எல்.சிக்கு தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் என்.எல்.சி, விவசாயிகள் என இரண்டு தரப்பினர் மீதும் தவறு உள்ளதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்க என்.எல்.சி தவறிவிட்டதாகவும், கையகப்படுத்த கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்தது விவசாயிகள் தவறு என்றும் நீதிபதிகள் கூறியதுடன் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது. நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும்” என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.