ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் இந்த கலகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தலைநகர் நியாமேயில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற ஆதரவு பேரணியும் நடைபெற்றிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்க நடவடிக்கைகளே ராணுவத்தினர் கலகங்களை மேற்கொள்வதற்குக் காரணம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. கலகம் நடந்தவுடன் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை மறுபடியும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
பிரான்ஸ் நாட்டின் காலனி நாடாக இருந்த நைஜர், விடுதலை பெற்ற பிறகும் பிரான்சின் மேலாதிக்கத்தில்தான் இருந்து வந்தது. இயற்கை வளங்களைச் சுரண்டும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தா லும், ஆட்சியாளர்களின் ஆதரவோடு பிரான்சின் கொள்ளை தற்போதும் நடக்கிறது. மக்களின் கருத்தைக் கணக்கில் கொண்டே ராணுவம் அதி காரத்தைக் கைப்பற்றியுள்ளதாக வல்லு நர்கள் தெரிவிக்கின்றனர். நைஜரில் ராணுவத்தினர் கலகம் செய்வது அடிக்கடி நடக்கிறது. ஜனநாயக ரீதியிலான தேர்தல்கள் நடத்தப்படும் போதெல்லாம் பிரான்சின் ஆசியுடன், அவர்கள் சொல்வதற்கு கீழ்ப்படியும் நபர்களே ஆட்சியில் அமர்த்தப்படு கிறார்கள். எனவே, ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவே தங்கள் எதிர் நடவடிக்கை என்று ஆட்சியைக் கைப்பற்றி யுள்ள ராணுவத்தினர் கூறுகிறார்கள். நைஜரில் உள்ள தங்கள் சொத்துக் களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை யாகவும் இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடு களின் ஒருங்கிணைப்போடு இதைச் செய்யப் போவதாகவும் பிரான்ஸ் கூறியுள்ளது. ஆனால் அத்தகைய நடவடிக்கை களை எடுத்தால், தாங்கள் நைஜரின் ராணுவம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று அண்டை நாடுகளான பர்கினோ ஃபசோ மற்றும் மாலி ஆகியவற்றின் அரசாங்கங்கள் எச்சரித்திருக்கின்றன. இந்த நாடுகளும் பிரான்சின் காலனி நாடுகளாக இருந்து விடுதலை பெற்றவையாகும். அந்த நாடு களிலும் பிரான்சின் ராணுவ முகாம்கள் இன்றும் தொடர்கின்றன. இயற்கை வளங் களைத் தங்கள் கைவசம் வைத்திருக்கும் அவல நிலையும் தொடர்கிறது.
மக்கள் ஆதரவு
ஆட்சியாளர்களைத் தூக்கி எறிந்து விட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவத்தினருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு வருகிறார்கள். மேற்கத்திய நாடுகளின் வல்லாதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக இந்தக் கலகத்தை அவர்கள் பார்க்கிறார்கள். மீண்டும் ஜன நாயகப் பூர்வமான நடவடிக்கைகளில் ராணுவத்தினர் இறங்கி விடுவார்கள் என்று கடந்த கால அனுபவங்களைக் கொண்டு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அமெரிக்கப் படைத்தளம்
நைஜரில் உள்ள அகாடெஸ் என்ற நகரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கள் ராணுவத்திற்குச் சொந்தமான ஆளில்லா விமானப் படைத்தளத்தை அமெரிக்கா அமைத்திருக்கிறது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆளில்லா விமானப் படைத்தளமாகும். அதோடு, அமெரிக்காவுக்கு வெளியில் அமெரிக்க விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டவற்றில் இதுதான் மிகப்பெரிய கட்டுமானப் பணியாகும். மேலும் ஒரு ராணுவ ஆளில்லா படைத்தளத்தையும் அமெரிக்கா நைஜரில் அமைத்திருக்கிறது. ராணுவம் கைகளில் அதிகாரம் வந்திருப்பதால் இந்த படைத்தளங்களை இழுத்து மூட வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.