நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு!

பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 8 கல்வி நிறுவனங்கள் எந்த பட்டமும் வழங்க அதிகாரமில்லாமல் செயல்பட்டு வருவதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 8 கல்வி நிறுவனங்கள் எந்த பட்டமும் வழங்க அதிகாரமில்லாமல் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி கூறியதாவது:-

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தின் விதிகளுக்கு மாறாக பல கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது யுஜிசியின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ இல்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரமும் இல்லை. டெல்லியில் எட்டு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், தர்யகாஞ்சில் உள்ள கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்; தொழிற்கல்வி பல்கலைக்கழகம்; ஏடிஆர்- சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்) இடம்பெற்றுள்ளன.

உத்தரபிரதேசத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், காந்தி ஹிந்தி வித்யாபீத், எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்), மற்றும் பாரதிய சிக்ஷா பரிஷத் உள்ளன. கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் போலியான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.