அரியானாவில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்ட சதி என்றும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி உள்ளார்.
அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது மற்றொரு தரப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் எரித்து சூறையாடப்பட்டன. மணிப்பூரில் 3 மாதமாக இரு இனமக்கள் இடையே வன்முறை நீடிக்கும் நிலையில், அரியானாவில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, ஆளும் பாஜ அரசு பாதுகாப்பை பலப்படுத்தியது. அரியானா போலீசாரைத் தவிர 20 கம்பெனி ஒன்றிய பாதுகாப்பு படையினர் வன்முறை பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.
இதனால் கலவரம் கட்டுக்குள் வந்திருப்பதாக மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி உள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த வன்முறையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேர், பொதுமக்கள் 4 பேர் என 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதிகாரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். சமூக ஊடகங்கள் மூலமாகவும் வன்முறையாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவது எங்கள் பொறுப்பு’’ என்றார்.
முன்னதாக தனது டுவிட்டர் பதிவில் கட்டார், ‘அரியானாவில் நடந்த வன்முறை திட்டமிட்ட சதி. மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க வன்முறையை தூண்டி உள்ளனர். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்கள்தான் ஈடுகட்ட வேண்டும்’ என கூறி உள்ளார்.
நூஹ் மாவட்டத்தில் தொடர்ந்து இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நேற்றும் பள்ளிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மாநில போலீஸ் டிஜிபி பி.கே.அகர்வால் கூறுகையில், ‘‘நிலைமை கட்டுக்குள் உள்ளது. குருகிராமில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பாக 41 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் பஜ்ரங் தளத்தின் மோனு மனேசர் பங்கு குறித்தும் விசாரிக்கிறோம்’’ என்றார்.
பசு பாதுகாவலரான மோனு மனேசர், ராஜஸ்தானைச் சேர்ந்த 2 முஸ்லிம்களை கடத்தி படுகொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர் விஸ்வ இந்து பரிஷத் யாத்திரையில் பங்கேற்பதாக இணையத்தில் வெளியான தகவல்கள் மூலம் வன்முறை பரவியது குறிப்பிடத்தக்கது.