வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகனுக்கு 9 ஆண்டு சிறைதண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் தாரிக் ரகுமானுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

வங்கதேச நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்படுவது தேசியவாத கட்சி ஆகும். இதன் செயல் தலைவர் தாரிக் ரகுமான். இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மூத்த மகன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை டாக்கா பெருநகர மூத்த சிறப்பு நீதிபதி எம்.டி. அசதுஸ்ஸாமான் விசாரித்தார். விசாரணை முடிவில் தாரிக் ரகுமானுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் கூடுதலாக மூன்று மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இதே போல் தாரிக் ரகுமானின் மனைவி ஜுபைதாவுக்கு 2 குற்றச்சாட்டுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.26 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.