கனடா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ தனது காதல் மனைவி சோஃபியை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமாக இருக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவர் கனடா நாட்டின் ஜஸ்டின் ட்ரூடோ. லிபரல் கட்சியின் தலைவராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடா பிரதமராக இருந்து வருகிறார். இதற்கிடையே ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் 18 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. தானும் சோஃபியும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் ட்ரூடோ தரப்பில் கூறுகையில், “அவர்கள் பிரிந்து செல்வது தொடர்பான சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுப்பார்கள். அதேநேரம் அவர்கள் ஒரு நெருக்கமான குடும்பமாக இருக்கிறார்கள். சோஃபியும் பிரதமரும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பான, அன்பான மற்றும் குடும்பச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அடுத்த வாரம் அவர்கள் ஒன்றாக விடுமுறை செல்லவுள்ளனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாகக் கூறப்படுகிறது. கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு வயது 51. மேலும், சோஃபிக்கு வயது 48 ஆகும். ட்ரூடோவும் சோஃபியும் சிறு வயது நண்பர்கள். அவர்கள் இருவரும் காதலித்துக் கடந்த மே 2005இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இத்தனை காலம் ட்ரூடோவுக்கு பெரிதும் உறுதுணையாக சோஃபி இருந்துள்ளார். அவர் கடந்த 2015இல் முதல்முறையாகப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் போது, சோஃபியும் பல இடங்களில் நேரில் சென்று பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.