ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு அளிப்பதாகவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். தனது உரையின் போது, மோடி பெயர் குறித்து ராகுல் முன் வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் தேதி அன்று தீர்ப்பு அளித்தது. அதில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ராகுல் காந்தி எம்.பி பதவியை மீண்டும் பெற முடியும்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், ‘ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது. வயநாடு தொகுதி ராகுலை தக்க வைத்துள்ளது. நீதித்துறையின் வலிமை ஜனநாயக்த்தின் விழுமியங்களை பாதுகாப்பதை தீர்ப்பு உறுதி செய்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.