ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து கூறிய கருத்தை, குஜராத் பாஜகவினர், திரித்து, வழக்காக பதிவு செய்து சூரத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 15 ஆயிரம் அபதாரமும் விதிக்கும் உத்தரவு பெற்றனர். இந்த அநியாய உத்தரவு வழங்கிய நீதித்துறை நடுவருக்கு பதவி உயர்வு வழங்கி கொண்டாட முனைந்ததை உச்ச நீதிமன்றம் தலையீட்டால் தடுக்கப்பட்டது.
கீழமை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு கடந்த ஜூலை 7-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என்ற கருத்து கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் கோரினார். அவரது முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் “ராகுல் காந்திக்கு விசாரணை நீதிமன்றம் (சூரத் கீழமை நீதிமன்றம்) கடந்த மார்ச் 23-ம் தேதி வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ 15 ஆயிரம் அபதாரம் என்ற தண்டனைக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தனி நபரின் உரிமைக்கு மட்டும் பாதகமாக அமையவில்லை. தொகுதி மக்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையினையும் பாதித்துள்ளது” என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சூரத் கீழமை நீதிமன்றம் தனது அதிகார எல்லை தாண்டி, அதன் எதிர்விளைவுகள் குறித்து கருத்தில் கொள்ளாது, ஒரு சார்பு நிலையில் நின்று, யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்ற முனைந்துள்ளது. நீதிமன்ற வரலாற்றில் சூரத் கீழமை நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்ச நீதிமன்றம் துடைத்து தூய்மைப்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்பதுடன் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில், வயநாடு தொகுதி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.