அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி
கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக மாநிலம் வாரியாக பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள், மத்திய மந்திரிகளை சந்தித்து தேர்தலில் வெற்றிக்கான வழிமுறைகள், தொகுதிக்கு தேவையான திட்டங்கள், மக்களை சந்திக்கும் அணுகுமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 31-ந்தேதி ஆலோசனையை தொடங்கிய அவர் வருகிற 10-ந்தேதி வரை மத்திய மந்திரிகள், எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார். நேற்று அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 27 எம்.பி.க்களுடன் கலந்துரையாடினார். இதில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும். இதற்கு பா.ஜ.க. எப்போதும் தயாராக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க. தியாகங்களைச் செய்துள்ளது.சாதி அடிப்படையிலான அரசியலுக்கு அப்பாற்பட்டு பணியாற்றுங்கள். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பணியாற்றுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு சாமானியர்களுக்காக பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு பொதுப் பிரச்சினைகளை தீர்த்து மத்திய அரசின் திட்டங்களை முன்னிலைப்படுத்தி உழைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.