சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் .ரவி உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
குடியரசுத் திரெளபதி முர்மு 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்தார். இந்த வேளையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் இன்று காலை 11 மணியளவில் திரெளபதி முர்மு புறப்பட்டார். டெல்லியில் இருந்து மைசூர் விமான நிலையத்துக்கு மதியம் 3 மணியளவில் வந்த திரெளபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாடு புறப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு திரெளபதி முர்மு வருகை தந்தார். முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, அதன்பிறகு யானை பாகன்களுடன் கலந்துரையாடடினார். தொடர்ந்து ‛ஆஸ்கர்’ வென்ற எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை அவர் சந்தித்து பாராட்டினார். அதன்பிறகு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் மைசூரூக்கு புறப்பட்டு சென்றார். மைசூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி திரெளபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. நாளை காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். அதன்பிறகு ஆளுநர் மாளிகை செல்லும் ஜனாதிபதி, அங்கு முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிறகு நாளை மதியம் 3.30 மணியளவில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்குமு் பாரதியார் படத் திறப்பு விழாவில் பங்கேற்று ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரை சூட்ட உள்ளார். அன்று இரவு அங்கு ஓய்வு எடுக்கும் அவா், ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் காா் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறாா்.