எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்: அமித்ஷா

தற்போது இந்தி மொழி ஏற்பு என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசும், பாஜக தலைவர்களும் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமித்ஷா ‛‛இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும்” என பேசியுள்ளார். இதுதொடர்பாக அமித்ஷா பேசியதாவது:-

இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியானதாக இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலமாகவே நாடு அதிகாரமிக்கதாக மாறும். இந்தி மொழியை ஏற்றுக்கொள்வதன் வேகம் என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் இறுதியில் எதிர்ப்பு இன்றி இந்தி மொழியை ஏற்க வேண்டும். ஏனென்றால் இந்தி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியில்லை.

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து சபதங்களை முன்னெடுத்துள்ளார். அதில் ஒன்று இந்தியாவின் பாரம்பரியத்தை காப்பது மற்றும் காலனித்துவ அடையாளங்களை அழிப்பது உள்ளிட்டவையும் அடங்கும். இந்த 2 சபதங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து இந்திய மொழிகளையும், ஆட்சி மொழியையும் வலிமைப்படுத்த வேண்டும். நாம் பேசும் மொழிக்கு மதிப்பளிக்காமல் பாரம்பரியத்தை மீட்க முடியாது. அதோடு ஒவ்வொரு உள்ளூர் மொழிகளுக்கும் மரியாதை கொடுக்கும்போது தான் ஆட்சி மொழிக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருபோதும் ஆங்கில மொழியில் உரை நிகழ்த்தியது இல்லை. அதேபோல் மத்திய அமைச்சர்களும் இந்தி மொழிகளில் உரை நிகழ்த்தி வருகின்றனர். இது நம் நாட்டின் பல்வேறு மொழிகளை இணைக்கும் நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. அலுவல் ரீதியான மொழிகளை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு சட்டம், சுற்றிக்கை உள்ளிட்டவற்றால் வரவில்லை. மாறாக நல்லெண்ணம் அடிப்படையில் வருகிறது. நாட்டில் இந்திய மொழிகளுக்கான அகராதிகள் அப்படியே உள்ளன. இது ஒரு பெரிய சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.