நிலம் கையகப்படுத்தும்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரத்தில் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20.52 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கபட்டதாக ஆர்.ராஜேந்திரன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் வருவாய் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் வருவாய் அதிகாரியாக இருந்த நர்மதா என்பவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிக்காமல் விட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள், அதிகாரிகளுக்கு வலுவான செய்தியைக் கூறும் வகையில் இந்த சிறை தண்டனை அமையும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.