இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த கருத்துக்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு என தேசிய மொழி என எதுவும் இல்லை என்றாலும் கூட அலுவல் மொழிகளாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என திமுக, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் வெளிநாடுகளில் பேசும்போதெல்லாம் தமிழில் உள்ள சில பொன்மொழிகளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.
இந்நிலையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்கள் மொழி தொடர்பான சலசலப்பை எழுப்பியிருக்கிறது. இந்த கூட்டத்தில் தலைமையேற்று பேசிய அவர், “அனைத்து இந்தியா மொழிகளையும் அங்கீகரிப்பதன் மூலம்தான் தேசம் அதிகாரம் பெரும். நமது நாட்டின் பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும். அதேபோல காலனித்துவத்தின் அடையாளங்கள் துடைத்தெறியப்பட வேண்டும். இது சாத்தியமாக வேண்டும் எனில் இந்திய மொழிகள் தங்கள் வலிமையை காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளும் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றியது கிடையாது. அமைச்சர்களும் இந்திய மொழிகளில் பேச தொடங்கியுள்ளனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் இயக்கத்திற்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது” என்று கூறியிருந்தார். இறுதியாக “இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இந்த கருத்துதான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிலளித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று அமித்ஷா பேசியுள்ளார். இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது. இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.