இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அலுவல் மொழிக்கான 38ஆவது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலியை பெறும். எந்தவிதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும். இந்தி மொழியை ஏற்றுக்கொள்வதன் வேகம் என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் இறுதியில் எதிர்ப்பு இன்றி இந்தி மொழியை ஏற்க வேண்டும். ஏனென்றால் இந்தி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியில்லை. அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. நல்லிணக்கம் உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக வர வேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை 10 மொழிகளில் தொடங்குவதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்த பாடத்திட்டங்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்க பெறும்” எனக் கூறினார்.
இந்நிலையில், இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local Language” என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆக்ரோஷமாக வந்தாலும் – அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள், இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.