கை அகற்றப்பட்டதால், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கை அகற்றப்பட்டதால், குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அரசு செய்த தவறுக்கு பிராயசித்தமாக, அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஏனென்றால், குழந்தையின் உயிர் திரும்ப வரப்போவது கிடையாது. எனவே, அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைக்கிறது. அந்த குழு யார் என்று பார்த்தால், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்தான் அந்தக் குழுவில் இடம்பெற்றனர். ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்தால், எப்படி உடன் பணியாற்றுபவரை காட்டிக் கொடுப்பார்? அவர் தவறு செய்தவரை காட்டிக் கொடுக்கமாட்டார். அதனால்தான், அதிமுக இதுகுறித்து அன்றைக்கே கேள்வி எழுப்பியது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், வெளியே இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைக் கொண்டு குழு அமைக்கவும், இந்த விவகாரத்தின் உண்மையை விளக்கவும் அதிமுக வலியுறுத்தியது.
ஏழையின் கண்ணீர் கூரிய வாளுக்கு சமம் என்பார்கள்; எனவே அந்த கூரியவாள் நிச்சயமாக இந்த அரசை வீழ்த்தும். மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ஆஷ் துரையாக ஸ்டாலின் உள்ளார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பராமரிக்காமல் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் பணிநியமனம் இல்லை, சுவாசிக்கும் கருவிகள் இல்லாமல் டீ கப்பை சாதனமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகள் மக்கள் மீதான நம்பிக்கையை இந்த அரசு இழந்து வருகிறது. மீண்டும் அம்மா ஆட்சி வரும்போதுதான் இது போன்ற சோகமான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
காவிரி நதிநீர் பிரச்னையில் பாஜக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளாரே? என்ற கேள்விக்கு, கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து கூட்டணிக் கட்சி உடன் பேச மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். சட்டப்படி தண்ணீர் விட்டாலேபோதும். இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பெங்களூரு சென்ற ஸ்டாலின் இது குறித்து எதுவும் பேசாமல் வந்துவிட்டார் என்றார்.