கர்நாடகாவில் காங்கிரஸ் செயல்படுத்திய நலத்திட்டங்களால் மக்களவை தேர்தலில் பிரதமருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 5 வாக்குறுதிகளை கொடுத்துத்தான் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சியமைத்தது. இந்த 5 வாக்குறுதிகளில் முதல் திட்டமாக சக்தி திட்டம் கடந்த ஜூன் 11ம் தேதியே அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் அன்னபாக்யா திட்டம் அமல்படுத்தப்பட்டது. சக்தி மற்றும் அன்னபாக்யா திட்டங்களை தொடர்ந்து 3வது திட்டமாக கிரக ஜோதி திட்டம் நேற்று கலபுர்கியில் தொடங்கப்பட்டது.
கிரக ஜோதி திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய முதல்வர் சித்தராமையா, ‘5 வாக்குறுதிகளில் கிரக ஜோதி திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 3 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. குடும்ப தலைவிக்கு மாதம் ₹2000 வழங்கும் கிரக லட்சுமி திட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கப்படும். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹3000 வழங்கும் யுவநிதி திட்டம் வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் தொடங்கப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை அளித்தோம். 2.14 கோடி பயனாளர்கள் கிரக ஜோதி திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியானவர்கள். அதில் 1.42 கோடி பயனாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஜூலை 1 முதலே இத்திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. எனவே ஜூலை மாதம் 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தியவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஜீரோ பில் வழங்கப்படும்’என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் , ‘காங்கிரஸ் சொன்னதை செய்யும். பிரதமர் மோடியை போல கிடையாது. நாட்டில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் டெபாசிட் செய்வோம் ஆகிய வாக்குறுதிகளை மோடி அளித்தார். ஆனால் அதையெல்லாம் செய்யவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் செயல்படுத்திய நலத்திட்டங்களால் மக்களவை தேர்தலில் பிரதமருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ’இந்தியா’ கூட்டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று கண்டிப்பாக ஆட்சியமைக்கும்‘ என்று பேசினார்.