தமிழக சுகாதாரத்துறை கடந்த 2 ஆண்டுகளாக ஐ.சி.யூ.வில் இருப்பதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்ட 1½ வயது ஆண் குழந்தை உயிரிழந்த துயர நிகழ்வே அதற்கு உதாரணம் எனவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது:-
பகல் – இரவு என பாராமல் மாரத்தான் வேகத்தில் கடமையாற்ற வேண்டிய தமிழக சுகாதாரத்துறை மந்தமான நிலையில் முடங்கிக் கிடப்பதற்கு சான்றாய், இன்று மிகப்பெரிய துயரச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
குழந்தையின் வலது கை அகற்றப்பட்டபோதே கழகத்தின் சார்பில் நேரிடையாக மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டபோது, ‘மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால்தான் என் குழந்தையின் கை பறிபோய் விட்டது; இப்போ, யாரு சார் என் புள்ள கையை திருப்பி கொடுப்பா?’ என கண்ணீரோடு அக்குழந்தையின் தாய் கதறியது இன்னும் கண்முன்னே நிற்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கொடுமைச் சம்பவம் நிகழ்ந்தபோதே சுகாதாரத்துறை விழித்திருந்திருக்க வேண்டும். அப்போது அமைத்த விசாரணைக் குழுக்களும், அறிக்கைகளும் எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது என தெரியவில்லை?
மருத்துவ சுகாதார கட்டமைப்பில்; அதன் தொய்வில்லா செயல்பாட்டில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்த நம் தமிழக சுகாதாரத்துறை, கடந்த 2 ஆண்டுகாலமாக ஐ.சி.யூ.வில் இருப்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்? இரங்கல் செய்தி எழுதுகிற வயதா இது? பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு துணை நிற்க வேண்டியது அனைவரின் பொறுப்பு. இனியாவது சுகாதாரத்துறை விழி திறந்து செயலாற்ற வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒரே எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.