கல்லூரி மாணவிகள் நமது கலாச்சாரங்களை மறந்துவிடக் கூடாது: குஷ்பு

கல்லூரி மாணவிகள் வெஸ்டர்ன் உடை அணியக் கூடாது என்பதில்லை. ஆனால் நமது கலாச்சாரங்களை மறந்துவிட கூடாது என்று குஷ்பு கூறினார்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் மக்கள் சேவை மையம் சார்பில் மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. சர்வதேச கைத்தறி தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவியும் மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவை வானதியும் குஷ்புவும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆடை அலங்கார போட்டியை குஷ்புவும் வானதியும் கேட்வாக் செய்து தொடங்கி வைத்தனர். தழைய தழைய புடவை அணிந்திருந்த குஷ்பு கேட்வாக் செய்து அசத்தினார். அப்போது வெட்கப்பட்ட வானதியையும் அழைத்து கேட்வாக் செய்ய வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆடை அலங்கார போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு. அவர் கூறியதாவது:-

கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவருக்கு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்டது. தற்போது பிரதமரானதும் அமெரிக்காவே கூப்பிட்டு கவுரவிக்கும் நிலை இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உலகிலேயே மிகப் பெரிய தலைவராக இருக்கிறார். கருணாநிதிதான் என்னுடைய ஆசான் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7 அவருடைய நினைவு நாள். காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்திருக்கிறேன். கருணாநிதி குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம். நான் அங்கிருந்துதான் வந்தேன். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். வேறு ஒரு நாள் அவரை பற்றி விரிவாக பேசலாம்.

கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும். இந்த ஆட்சியில் கைத்தறி வளர்ச்சி அடைந்திருக்கிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் கைத்தறி பொருட்கள் பயன்படுத்துகிறோம். கல்லூரி மாணவிகள் வெஸ்டர்ன் உடை அணியக் கூடாது என்பதில்லை. ஆனால் நமது கலாச்சாரங்களை மறந்துவிட கூடாது. ஆடை சுதந்திரம் இப்படித்தான் என்றில்லை. நமக்கு ஆறு அறிவு இருக்கிறது. நம் எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எனக்கு புடவைதான் எல்லை. அது போல் அவரவர் எல்லையை தாண்டாமல் இருத்தல் நல்லது. இவ்வாறு குஷ்பு கூறினார்.