மக்கள் பாடகர் கத்தார் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனித் தெலங்கானா போராட்டங்களில் முன்னின்று பங்காற்றியவரும், புரட்சிக் கவிஞருமான ‘மக்கள் பாடகர்’ கத்தார் இன்று காலமானார். அவருக்கு வயது 77. தன் புரட்சிகர வரிகள் மூலம் தெலுங்கானா பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை நாடு முழுவதும் கடத்தியவர் கத்தார். மக்கள் பாடகர் கத்தாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கத்தார் மறைவால் அதிர்ச்சியுற்று உணர்வுப்பூர்வமாக இரங்கல் தெரிவித்துள்ளார். திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:-
ஜன நாட்டிய மண்டலி இயக்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கச் செயற்பாட்டாளருமான புரட்சிக் கலைஞர் தோழர் கத்தார் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதயத்தின் இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் திடீரென அவர் உயிரிழந்திருக்கிறார். புரட்சித் தீ மூட்டிய ‘மக்கள் பாடகர்’ கத்தார் காலமானார்.. தனி தெலுங்கானா போராட்டங்களில் முன்னின்றவர்! விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை மிகவும் ஊக்கப்படுத்தியவர். எமது பெரியார் விருதினைப் பெற்று எமக்குப் பெருமை சேர்த்தவர். அவரது மறைவு உழைக்கும் மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
விசிகவின் பெரியார் ஒளி விருது பெற்றவர் அண்ணன் கத்தார். மார்க்சியம் லெனினியம் மட்டுமின்றி அம்பேத்கரியமும் பெரியாரியமும் இம்மண்ணின் மைந்தர்களை விடுவிக்க இன்றியமையாத தேவை என்பதை வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டவர். அவருக்கு விசிக சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அண்ணன் கத்தார் அவர்களின் திருவுடலுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்துவதற்காக ஆந்திரா- அனந்தபூரிலிருந்து காரம்சேடு, சுண்டூர் போராளிகளின் நினைவேந்தல் கூட்டத்தை முடித்த பின்னர் இன்று இரவே ஹைதராபாத் செல்கிறேன். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.